அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ள சூழலில், மாட்டு கோமியம் குடித்தால் மருத்துவ நன்மைகள் கிடைக்கும் என்பது போன்ற மூடநம்பிக்கைக் கருத்துகளும் பரப்பப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை எளிதாக கடந்துபோக முடியாது.
குறிப்பாக, அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், இதுபோன்ற அறிவியலுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி, சாதாரண மக்களை அதை நம்பச் செய்ய வைப்பது மிகவும் ஆபத்தானது.
மாட்டுப் பொங்கலையொட்டி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற சென்னை ஐஐடி இயக்குநர் திரு. காமகோடி அவர்கள், உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் சக்தி மாட்டு கோமியத்தில் உள்ளது என்றும், கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும், அஜீரணக் கோளாறு சரியாகும் என்றும் பிற்போக்குத்தனமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பசுவின் கோமியத்தைப் பருகுவதால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவரும் நிலையில் கோமியம் குடிப்பதை ஆதரிப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அறிவியலால் அங்கீகரிக்கப்படாத விஷயத்தை ஒரு கல்வியாளர் பொதுவெளியில் பேசியிருப்பது
விஷமத்தனமானது.
அறிவியல், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள், தங்களது கருத்துகள் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். மேலும், இதுபோன்ற கருத்துகள், கல்வி நிறுவனங்களின் அறிவுச் செயல்பாட்டையே கேள்விக்குறியாக்கும்.
மூடநம்பிக்கை என்பதைத் தாண்டி, கோமாரி, ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மாட்டின் கோமியத்தைக் குடிப்பது உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. போலி அறிவியல் கருத்துகளை ஐஐடி இயக்குநரே பரப்புவது வேதனைக்குரியது மட்டுமின்றி, கடும் கண்டனத்திற்குரியது. அவர் தனது கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மக்கள் நீதி மய்யத்தின் மாணவர் அணி வலியுறுத்துகிறது.
-ராகேஷ் ராஜசேகரன்,
மாநிலச் செயலாளர், மாணவர் அணி.