கிராமசபைக் கூட்டங்களை முறைப்படி தொடர்ந்து நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.
மநீம சட்டப் போராட்டத்துக்கு வெற்றி.
(25-01-2024)
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதலே மக்கள் பிரச்னைகளுக்காகக் களத்தில் நிற்பதிலும் தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் சட்ட ரீதியான தீர்வுகள் காண்பதிலும் முன்னோடியாக இருந்துள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், இல்லத்தரசிகளுக்கு ஊதியம், எண்ணூர் பிரச்னை, தமிழ் பரப்புரைக் கழகம், உள்ளாட்சியில் பங்கேற்பு ஜனநாயகம், ஒன் டிரில்லியன் எக்கானமி என எண்ணிலடங்கா விஷயங்களைத் தமிழ்நாட்டில் முதன்முதலில் முன்னெடுத்த பெருமை மக்கள் நீதி மய்யத்திற்கு உண்டு.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தாமல் நிறுத்திவைத்தபோது, அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். `டாஸ்மாக் கடைகளை நடத்த முடியும்போது, கிராமசபைக் கூட்டங்களை நடத்த முடியாதா?' என்று கேள்வி எழுப்பினோம்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், நம்முடைய நியாயமான கோரிக்கையை ஏற்று சாதகமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கிராமசபைக் கூட்டங்கள் முறைப்படி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது மக்கள் நலனுக்காக மக்கள் நீதி மய்யம் மேற்கொண்ட சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.
மக்கள் தங்களின் குறைகளுக்கு, துரிதமாகத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட கிராமசபை தூர்ந்து கிடந்தபோது, அதன் உண்மையான வலிமையையும், பங்கேற்பு ஜனநாயகத்தின் அவசியத்தையும் குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது மக்கள் நீதி மய்யம்.
மாநில அரசிடம் அறிக்கைகள் வாயிலாகவும், நேரிலும் வலியுறுத்தி கிராம சபைக் கூட்டங்களை நடத்தச் செய்தோம். அது போலவே, நகராட்சி, மாநகராட்சியிலும் மக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, ஏரியா சபை நடத்தப்பட வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் முதல் குரல் எழுப்பியது. இப்போது பகுதிவாரியாக நடத்தப்படும் ஏரியா சபைக் கூட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவர வித்திட்டதும் மக்கள் நீதி மய்யம்தான்.
இவையெல்லாம், பாதி வெற்றிதான். இவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து மக்கள் இக்கூட்டங்களில் பங்கெடுத்துக்கொள்வதுதான் உண்மையான வெற்றி. மக்களாகிய நீங்கள் உங்கள் உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையாக இருக்கும் அனைத்தையும் நாங்கள் எங்கள் கடமையாகக் கருதிச் செய்வோம்.
நாளை நமதே!
கமல்ஹாசன்
தலைவர், மக்கள் நீதி மய்யம்.