கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள்.
என் பேரன்புக்கு உரிய நண்பர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர், அனைவரின் நினைவிலும் வாழும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குருபூஜைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் நட்பார்ந்த வணக்கங்கள்.
விஜயகாந்த் அவர்களின் இனிய குணத்தாலும் பழகும் பண்பாலும் நாங்கள் பரஸ்பரம் அன்பு பாராட்டும் நண்பர்களானோம். திரைத் துறையில் நாயகனாக அவர் சாதித்துக் காட்டிய விதத்தில் சக நடிப்புக் கலைஞர்களின் வியப்புக்குரியவராகத் திகழ்ந்தார்.
நடிகர் சங்கத் தலைமைப் பொறுப்பில் அவர் இருந்தபோது செய்த பெரும்பணிகளைத் திரைத் துறையைச் சார்ந்த எவரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியைத் துவக்கி தமிழக அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தார்.
தனிப்பட்ட முறையிலும் தனது சமூக உணர்வாலும், மனிதர்களிடையே சமத்துவம் பாராட்டும் பாங்காலும் ஏராளமான இதயங்களை வென்றெடுத்து, சாதனை புரிந்தார்.
அவரது மனிதாபிமானச் செயல்கள் இன்றும் அவரை லட்சக்கணக்கான இதயங்களில் நிலை நிறுத்திவைத்துள்ளன.
அவரது செயல்பாட்டாலும் நற்குணத்தாலும் ஈர்க்கப்பட்டு ரசிகர்களாகவும் தொண்டர்களாகவும் ஆன அன்பர்கள் எந்நாளும் அதே நிலையில் அவரது ரசிகர்களாகவும் தொண்டர்களாகவும் தொடர்வதே அவரது பெருமைக்குச் சாட்சி சொல்லும்.
களப்பணியிலும் கலை வானிலும் நிலவாக ஜொலித்த அவர்தம் பெருமை என்றும் மங்காது. செய்ய வேண்டிய எத்தனையோ காரியங்களை மனதில் சுமந்திருந்த அவர், அகாலத்தில் நம்மையெல்லாம் நீங்கியது துயரமே எனினும், அவர் செய்து முடித்த செயல்கள் அவரை நம்மிடையே இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது ஆறுதல் தருகிறது.
அதே போல இந்த நாளில் என்னால் இங்கு நேரில் இருக்க முடியாத சூழ்நிலையால் வருத்தம் இருப்பினும், மானசீகமாக இங்கே இருக்கிறேன் என்பதில் ஆறுதல் கொள்கிறேன்.
-கமல் ஹாசன்
தலைவர்
மக்கள் நீதி மய்யம்.