மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு,
வணக்கம்.
ஜனநாயகத்தின் அடித்தளமான உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது, அவற்றில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பது போன்றவற்றுக்காக நமது தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார். குறிப்பாக, மக்கள் பங்களிக்கும் கிராம சபைக் கூட்டங்கள் தடைகளின்றி, தொடர்ந்து நடைபெற வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்.
நமது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும், கிராம சபைக் கூட்டங்களில் தவறாது பங்கேற்று, கிராமத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், நகரப் பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்யும் `ஏரியா சபை (பகுதி சபை)' கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
2022 பிப்ரவரி 21-ம் தேதி நமது தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு நேரடியாகச் சென்று, தலைமைச் செயலாளரைச் சந்தித்து, ஏரியா சபைக் கூட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25, அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14, அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 மற்றும் மனித உரிமை தினமான டிசம்பர் 10 என ஆண்டுக்கு 4 முறை ஏரியா சபை (பகுதி சபை) கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
அதனடிப்படையில் நாளை (ஜனவரி 25-ம் தேதி) சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் “ஏரியா சபை” கூட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது வார்டில் நடைபெறும் ஏரியா சபைக் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகளை கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடைபெறும் ஏரியா சபைக் கூட்டங்கள் குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கேட்டறிந்து, அவற்றில் பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து, அவற்றுக்குத் தீர்வுகாண உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! நாளை நமதே!
செந்தில் ஆறுமுகம்,
மாநில செயலாளர் - தலைமை அலுவலகம்,
மக்கள் நீதி மய்யம்.