மக்கள் நீதி மய்யம் பற்றி
மக்கள் நீதி மய்யம் பற்றி
ஏன்
மக்கள் நீதி மய்யம்?
வலது - இடது என இரண்டு சித்தாந்தங்கள், தங்களது தனித்துவத்தோடும் பகிரங்கமாகவும் உலகளாவிய அரசியல் களமாடி வருகின்றன. வலது சாரிகள், தங்கள் சிந்தனைகளை மட்டுமே புள்ளியாகக் கொண்டும், இடது சாரிகள், தங்கள் செயல்களை மட்டுமே புள்ளியாகக் கொண்டும் செயல்பட்டு, ஒரு சமநோக்கு இல்லாத அரசியலை முன்வைத்தே நம்மை ஆண்டு வருகின்றனர்.
இவ்விரு துருவங்களின் ஆளுமையின் நடுவே, மக்களுக்கான அரசியல் தொலைந்து போய்விட்டது என்பது உண்மை. மக்களுக்கானத் தேவைகளும், மக்களுக்கான உரிமைகளும் புறந்தள்ளப்பட்டுள்ளன.
அரசு அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மையற்ற செய்கைகளும், அனாயாச வேகத்தில் வளர்ந்திருக்கும் ஊழலும் , அரசியல்வாதிகளின் மெத்தனப் போக்கும், 'முன்னேற்றம் ' என்ற ஒற்றை வார்த்தையைக் காணாமல் போக செய்து விட்டன.
இத்தகையத் தடைக் கற்களைத் தகர்த்தெறிய, ஒரு மாறுபட்ட சித்தாந்தம் தேவைப்பட்ட நிலையில், நிலைகுலைந்த அரசியல் இயக்கவியலை சீர் செய்ய திரு. கமல்ஹாசனால் மட்டுமே முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நிலையில் உதித்தது தான் மக்கள் நீதி மய்யம்.
மய்யத்தின் கோட்பாடுகள்
தொலைநோக்குப் பார்வையுடன், மக்களை முன்னிலைப்படுத்தி , சமூகம் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம். மக்கள் நீதி மய்யம் , இடதும் இல்லை; வலமும் இல்லை. ஒவ்வொரு முக்கிய பிரச்சனைகளின் வேர் வரை சென்று , ஒரு நடுநிலைப் பார்வையோடு அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளை வகுப்பதே மய்யத்தின் குறிக்கோள்.
ஒரு நல்ல அரசின் கடமை, மக்களுக்காக , மக்களின் குரலாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், மக்களையும் பங்குபெற செய்வதே! மக்களின் தேவைகளும் உரிமைகளும் மக்கள் நீதி மய்யத்தின் இரு கண்கள். தன்னிறைவே மய்யம் . இதுவே CENTRISM என சொல்லப்படும் மய்யக் கொள்கை.
தமிழ்நாட்டை, இந்தியாவின் வரைபடத்தில் , வளர்ச்சியின் குறியீடாகப் பதிக்கத் தேவையான கல்வியும் திறன்மேம்பாடும் முதன்மை முயற்சிகளாக மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்களில் இடம்பெற்றுள்ளன.
மேம்பட்ட குறிக்கோள்
தமிழ் நாகரிகத்தின் சான்றுகளை, சுயலாபத்திற்காக சிதைக்காமல், அவற்றை கால வரிசைப்படி சரியான முறையில் உலகுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தை மய்யம் உணர்ந்து செயல்பட்டு வருகிறது.
பகுத்தறிவோடு தொழில்நுட்ப வளர்ச்சியும் தமிழ்நாட்டின் முக்கியத் தேவைகள் என்ற புள்ளியில் தொடங்குகிறது மய்யத்தின் செயல்பாடுகள்.
சமூக நீதியும் ஜனநாயகமும் இரு கண்களாகக் கொண்டு பிப்ரவரி 21, 2018ல் நிறுவப்பட்டது மக்கள் நீதி மய்யம்.
மய்யவாதம்
மய்யவாதம் என்பது மிதவாதம் அல்ல.
வலிமை, பாரம்பரியம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்கு வலு சேர்க்கும் சிந்தனையே மய்யவாதம்.
சித்தாந்தத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல் ஆதாரங்களின் அடிப்படையிலும் கொள்கை உருவாக்கம் செய்யும் சிந்தனையே மய்யவாதம். மய்யவாதிகள், தன்னிச்சை சிந்தனையாளர்கள். எண்ணச் சுதந்திரம் கொண்டவர்கள்.
எந்த ஒரு பிரச்சனையையும், நியாயம், சாத்தியக்கூறு மற்றும் அப்போதைய சூழலின் அடிப்படையில் அணுகும் திறனாளர்கள்…
சித்தாந்தத்திற்காகப் போராடுவதை விட நியாயத்திற்காகக் கொடியேந்தும் போராளிகள்.
சித்தாந்தம், பகுத்தறிவுத் திறனைக் கட்டுப்படுத்துகிறது என்று அவர்கள் நம்புவதால், மய்யவாத நம்பிக்கை சித்தாந்தத்தால் வரையறுக்கப்படவில்லை. நடைமுறை யதார்த்தம் மற்றும் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்ட பகுத்தறிவை நம்பி வரையறுக்கப்பட்டது தான் மய்யவாதம்.
இரண்டு, எதிரெதிர் துருவங்கள் தங்கள் சுய நிரல்களிலும் சித்தாந்தங்களிலும் தொடர்ந்து ஈடுபடுவதை விட, உண்மைகளைக் கையாண்டு, ஒன்றாகச் செயல்படுவதில் கவனம் செலுத்தினால், பல சிக்கல்களைச் சரி செய்ய முடியும் என்பது மய்யவாதிகளின் நம்பிக்கை.
மய்யவாதம் என்பது, ஏற்றுக்கொள்ளப்பட்டப் புகழ்பெற்றவற்றை செய்வதல்ல. மய்யவாதம் என்பது, எது சரியோ அதை செய்வது.
கொள்கைகள்
மக்கள் நலனே மய்யத்தின் கொள்கை.
சாதி களைவோம். சமத்துவம் காப்போம்.
அரசு இயந்திரங்களின் / இயக்கங்களின் முறைகேடுகளை அறவே அழிப்போம்.
கல்வியில் சமத்துவமும் சர்வதேசத் தரமும் எய்துவோம்.
நீர் பெருக்கி நிலம் காப்போம்.
தொன்மை போற்றுவோம் தொழில்கள் தேற்றுவோம்.
தமிழர் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுப்போம்.