தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்பதுடன், இதற்காக தமிழக முதல்வரையும், அரசையும் பாராட்டுகிறோம்.
பதவியேற்றது முதலே தமிழ்நாட்டுக் கலாச்சாரம், பண்பாடு, மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே கருத்துகளைத் தெரிவித்து வந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி வந்த அவர், ஒரு கட்டத்தில் அரசியல் சட்ட வரையறைகளையும் மீறிவிட்டார்.
மக்கள் நலனுக்காக, மக்கள் பிரதிநிதிகளால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட காலநிர்ணயம் செய்யுமாறு மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தி தமிழக அரசு சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது மிகத் துணிச்சலான முடிவாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்மானத்தை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதுடன், இதைக் கொண்டுவந்த அரசுக்கும், முதல்வருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், இதற்கு ஒத்துழைத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், எம்.எல்.ஏ-க்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். உரிய காலத்தில் ஒப்புதல் அளித்திருந்தால், பலரின் தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும். சட்டப்பேரவை நிறைவேற்றும் ஒவ்வொரு மசோதாவுக்கும் இந்த முறையில்தான் ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டுமா? எனவே, ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மற்ற மசோதாக்களுக்கும் அவர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
நமது ஜனநாயக அமைப்புக்கு ஆளுநர் தேவையா என்ற விவாதம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் வழியாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் அரசுக்கு இடைஞ்சல் செய்யும் போக்கு தொடர்வதை தமிழ்நாடு ஒருபோதும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்பதை இது உணர்த்தியுள்ளது.
இது தமிழக அரசின் குரல் மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரல்; இந்தியாவின் குரல் என்பதைப் புரிந்துகொண்டு, ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்பு மரபுகளுக்கும் விரோதமாகச் செயல்படுவதை இனியாவது நிறுத்திக் கொள்ளுமாறு ஆளுநருக்கு தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
ஆ. அருணாச்சலம் MA., BL.,
பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம்.
Social Media links:
Twitter: https://twitter.com/maiamofficial/status/1645761196510056448?t=Yl5qCZjlDUUvul_fEFXTFQ&s=19
Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02XHSyoGH1F7T7gWKNJdJNDVBgxR8ijkmge8Y8QfZgLEnj4SNx52uk1wP36nA3JLjal&id=100064900236042&mibextid=Nif5oz
Instagram: https://www.instagram.com/p/Cq5TbYmpjuu/?igshid=YmMyMTA2M2Y=