இன்று 28.4.2023 மதியம் கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகள் பலர் கருந்துரையாற்ற நிறைவாக தலைவர் நம்மவர் பேசினார்.
கூட்டத்தில் தலைவர் நம்மவர் பேசியதாவது...
இன்று காலை திரு. ராகுல் காந்தி அவர்கள் தன்னிடம் அலைபேசியில் பேசியதாகவும், அத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் திரு. டி.கே.சிவக்குமார் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நம்மவர் பிரச்சாரம் செய்ய அழைப்புக்கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிட்டார். அதுபற்றிய முடிவை தான் விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்திய தலைவர் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் மற்றும் பூத் கமிட்டி அமைப்பதில் தீவிரம் காட்டும்படியும் அறிவுரை கூறினார். கட்சியில் சிறப்பான களப்பணிகள் செய்வோர் அனைவரும் உரிய முறையில் அங்கீகரிக்கப் படுவார்கள் என்பதை சுட்டிக்காட்டினார்.
தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால்நேர்முகச் சிந்தனைகளோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உலகத்தில் சிறந்த சொல் ‘‘செயல்’’ என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்..
அரசியல் சாசனத்திற்கு ஆபத்து வருகையில் அதனைக் காப்பாற்ற கட்சிபேதங்களைக் கடந்து அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும்.
சிறப்பான கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்த கோவை, சேலம் மண்டல நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து விடைபெற்றார் தலைவர்.
- ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1651950641248608256?t=zzGsgaZCRK5U0TBL9sFCvw&s=19
Instagram: https://www.instagram.com/p/CrlSMFAPc_Z/?igshid=YmMyMTA2M2Y=