2024 ஜனவரி 23-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடந்த நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-வது ஆண்டு துவக்க விழாவினை பிரமாண்டமான அளவில் நடத்த தீர்மானிக்கப்படுகிறது.
2. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி மாத இறுதியில் நடத்த தீர்மானிக்கப்படுகிறது.
3. தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மக்கள் நலன்களுக்கு உகந்த, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளுக்கு ஒத்துவரக்கூடிய தேர்தல் வியூகங்களை உருவாக்க தகுதிசால் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க நிர்வாகக் குழுவிற்கு அதிகாரமளிக்கப்படுகிறது.
4. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மேம்பாட்டிற்காக மக்கள் நீதி மய்யம் ஆற்றிவரும் பணிகளை வலுப்படுத்தும் விதமாக ‘மாற்றுத் திறனாளிகள் அணி’ உருவாக்க தீர்மானிக்கப்படுகிறது.
5. காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் எதிர்கொண்டு வருவதை மனதிற்கொண்டு மண்டல வாரியாக ‘மக்கள் நீதி மய்ய பேரிடர் மீட்புக் குழு’ உருவாக்க தீர்மானிக்கப்படுகிறது.
6. ஜனவரி 25-ஆம் தேதி ‘தேசிய வாக்காளர் தினம்’. ஒவ்வொரு தேசிய வாக்காளர் தினத்தின் போதும் நமது தலைவர் நம்மவர் அவர்கள் வீடியோக்கள் வாயிலாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். இளைஞர்கள் அவசியம் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும் என்பதை அவர் கலந்துகொள்ளும் கல்லூரி விழாக்களில் வலியுறுத்தி வருகிறார். தலைவரின் வழிகாட்டுதல்படி, மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் தேசிய வாக்காளர் தினத்தன்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விரிவான பிரச்சாரங்களைக் களத்திலும் சமூக ஊடகங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
7. நமது தலைவர் அவர்களின் சிந்தனைகளின் தொகுப்பாக வெளியாகி இருக்கும் ‘மய்யம் தேர்ந்தெடுத்த படைப்புகள்’ புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. கமல் பண்பாட்டு மையத்தின் இம்முயற்சியை நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு பாராட்டுகிறது.
இதனைத் தொடர்ந்து தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் முன்னிலையில் மாற்றுத் திறனாளிகள், ஆட்டோ தொழிற்சங்கம், மற்றும் மகளிர் உள்ளிட்ட 200 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்கள்.
மேலும் மக்கள் நீதி மய்யத்தின் புதிய மாவட்ட செயலாளர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதன்பிறகு மாணவர்களை சந்தித்த தலைவர் நம்மவர், அரசியலின் மாற்றம் மாணவர்களின் கைகளில்தான் உள்ளது என்றும் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
in அறிக்கைகள்