நம்மவர் படிப்பகங்கள் மூலம் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் (17/03/2025)
எதிர்காலத் தலைமுறையின் நலன்களை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக தற்போது நம்மவர் படிப்பகங்களில் கோடைகால இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னரே தனது ரசிகர் மன்றங்களை, நற்பணி இயக்கமாக மாற்றி, இரத்த தானம், உடல் தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என தொடர்ந்து மக்களுக்குப் பயனளிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார் திரு. கமல் ஹாசன் அவர்கள்.
அதேபோல, மாணவர்கள், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டுமென்ற உன்னத லட்சியத்துடன் நம்மவர் படிப்பகங்களைத் தொடங்கி வருகிறார். தற்போது மதுரை, அருப்புக்கோட்டை, பரமக்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்கள் மூலம் குழந்தைகள், மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் என ஏராளமானோர் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். கமல் பண்பாட்டு மையம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்களில் புத்தகங்களுடன், இலவச WIFI வசதியுடன் கூடிய கணினிகளும் நிறுவப்பட்டுள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வருகை புரிகின்றனர்.
இந்தப் பணியை ஒருங்கிணைக்கும் வட அமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கம், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்புக்கான விஷயங்களை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்க அரசின் சிறந்த சமூகத் தொண்டுக்கான விருதுச் சான்றிதழ் தரத்தைப் பெற்றுள்ள இவ்வமைப்பு, மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான பள்ளிக் கட்டிடத்தைப் புதுப்பித்துக் கொடுத்துள்ளது. அதேபோல, பல்வேறு மாவட்டங்களில் 15 பள்ளிகளில் 185 கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.
“திறன் மேம்பாடுதான் இந்தியாவின் அடுத்த சத்தியாகிரகம்” என்று திரு. கமல் ஹாசன் அவர்கள் கூறுவார். நாட்டின் கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம், அவர்களது பொருளாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி, வறுமைக்கோட்டை அழித்து, செழுமைக்கோடாக மாற்ற முடியும். கிராமப்புற இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கி, நகரங்கள் மற்றும் கிராமங்களிடையே இணைப்புப் பாலமாக மாற்றுவது அவசியமாகும். அதற்கு தரமான கல்வியும், வேலைவாய்ப்பை வழங்குவதும் முக்கியம்.
அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் செயல்படும் லீப் (Language Education and Proficiency) என்ற அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை அளித்து வருகிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து நம்மவர் படிப்பகங்களில் கோடை விடுமுறையில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 வாரங்களுக்கு நடத்தப்பட உள்ளது.
அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் அமெரிக்க மற்றும் இந்திய மாணவர்கள், ஆன்லைன் வாயிலாக நம்மவர் படிப்பகங்களில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க உள்ளனர். ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தயக்கத்தைப் போக்கி, மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும். குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் தகுதியை மேம்படுத்தி, அவர்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும். மாணவர்கள், மகளிர் ஆகியோரது மேம்பாட்டுக்கானப் பணிகளில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து ஈடுபடும். சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கி, கல்வியும், திறன்மேம்பாடும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே மக்கள் நீதி மய்யத்தின் பிரதான நோக்கமாகும்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.


