சாதிதான் எனது அரசியல் எதிரி என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கூறினார்.
சென்னை எழும்பூரில் திரைப்பட இயக்குநர் திரு.பா.ரஞ்சித் அவர்களின் `நீலம் கலாச்சார மையம் மற்றும் புத்தக விற்பனையகம்' திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதைத் திறந்துவைத்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: `உயிரே, உறவே, தமிழே வணக்கம்' என்று கூறுவது எனது வழக்கமான மேடைப் பேச்சுகளின்போது பயன்படுத்தும் வார்த்தைகள் என்றாலும், இதுதான் எனது வாழ்க்கையின் உண்மைத் தத்துவம். அவை அலங்காரத்துக்காக சொல்லும் வார்த்தைகள் அல்ல. இந்த வார்த்தைகள்தான் நான் உயிர் வாழ்வதற்கானக் காரணம். இந்த உறவு இருந்தால்தான், நான் நிமிர்ந்து நிற்க முடியும். என் மொழி இருந்தால்தான் நான் இவர்களுடன் பேச முடியும். இந்த மூன்றையும் காக்க வேண்டியது எனது கடமை. என் தேவையும்கூட.
நானும், ரஞ்சித்தும் இல்லாதபோதும்கூட, தாக்கங்கள் ஏற்படுத்தக் கூடியவை புத்தகங்கள். நீலம் பதிப்பகம் பல நூற்றாண்டுகள் இயங்க வேண்டும்.
அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றை தனித்தனியே வைத்திருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நாம் உருவாக்கியதுதான் அரசியல். மக்களுக்கானதுதான் அரசியல்.
ஆளும் கட்சி, ஆள்பவர்கள் என்ற வார்த்தைகளே இனி வரக்கூடாது என்று நான் கருதுகிறேன். நாம் நியமித்தவர்கள் அவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வரும் பட்சத்தில்தான், ஜனநாயகம் நீடித்து வாழும்.
அப்படி இல்லாமல், தலைவனை வெளியே தேடிக் கொண்டிருக்கும் தலைவர்கள் பலர், இங்கே குடிமகன்களாக இருக்கிறார்கள். அவர்கள் தன்னளவில் தலைவன்தான் என உணரும் பட்சத்தில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா வரக்கூடும்.
எனது முக்கியமான அரசியல் எதிரி சாதிதான். இதை எனது 21 வயது முதலே சொல்லிவருகிறேன். இப்போதும் அந்தக் கருத்து மாறவில்லை. சக்கரத்துக்குப் பிறகு மனிதனின் மாபெரும் சிருஷ்டி கடவுள். நமது உருவாக்கம், நம்மையே தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் கொடூரமான ஆயுதம் என்ற சாதியை, அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்று, மூன்று தலைமுறைக்கு முன்பிருந்த அம்பேத்கர் முதல் பலரும் கூறிவருகின்றனர். ஆனால், இன்றும் நடக்கவில்லை.
இந்த தொடர் போராட்டத்தின் நீட்சியாகத்தான் நீலம் பண்பாட்டு மையத்தைப் பார்க்கிறேன். எழுத்துகள் வேறாக இருந்தாலும், மய்யமும் நீலமும் ஒன்றுதான். மய்யம் என்ற பத்திரிகையை நான் நடத்தியபோது, அதில் எழுதப்பட்டிருந்த தலையங்கங்களைப் இப்போது பார்த்து வியக்கிறேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, நீலம் போன்ற தனது முந்தைய சாதனைகளைப் பார்த்து ரஞ்சித் வியப்படைய வாய்ப்புள்ளது. அவருடன் இருக்கும் நீலம் பண்பாட்டு மைய நண்பர்கள் அனைவருக்கும் இந்த வியப்பு மேலிட வாழ்த்துகள்.
தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள், நெருக்கடிகள் உண்டாகும். அதையெல்லாம் எதிர்கொண்டு, சாதனைகளைப் புரிய வேண்டும். இந்த மையத்தில் இருந்து எத்தனையோ பேர் அறிவுபெறப் போகிறார்கள். பல சாதனையாளர்களை நீங்கள் உருவாக்குவீர்கள். அதை மனதில் கொண்டு வேலை செய்தால், பணிவும், பண்பும் தானாக வந்துசேரும். என்னையும் உங்களில் ஒருவராக சேர்த்துக் கொண்டதில் மிகவும் பெருமையடைகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், "வியாபார நோக்கில் இல்லாமல், கலாசாரத் தளமாக சினிமாவைப் பயன்படுத்தியவர் கமல்ஹாசன். நான் அம்பேத்கரை வாசிக்கத் தொடங்கிய பிறகுதான், நான் யார் என்ற கேள்விக்கான பதில் கிடைத்தது. அந்த பதிலைத்தான் திரைப்படங்கள், நீலம் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்துகிறேன். காட்சியாகப் புரியவைக்க முடியாததை, எழுத்து மிகச் சிறப்பாக தெளிவுபடுத்தும். குறிப்பாக, தன்னை அறிவதற்கான வாய்ப்பை புத்தகங்கள் வழங்கும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.