அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் பலாத்காரம்
குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து வழங்கவேண்டும்!
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!
27-12-2024
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பல்கலைக்கழக வளாகத்திலேயே ஞானசேகரன் எனும் சமூகவிரோதியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயருடன் கூடிய முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியாகியுள்ளது கூடுதல் வேதனையைத் தருகிறது.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எனும் நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு தொடர் குற்றவாளி. அவர் இந்தியாவின் உயர்தரமான பல்கலைக்கழகமொன்றின் வளாகத்தில் சர்வ சாதாரணமாக நடமாடியுள்ளதும், கொடூரமான குற்றத்தை அரங்கேற்றியுள்ளதும் பாதுகாப்பு குறைபாடுகளைத்தான் காட்டுகிறது.
காவல்துறை தங்கள் விசாரணையை முடுக்கி, குற்றம் இழைத்தவருக்கு அதிகபட்ச தண்டனை விரைந்து கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறை கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, கேமராக்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதிசெய்யும் வகையில் அவற்றை முறையாகப் பராமரிப்பது , அடிக்கடி ரோந்து செல்வது, தொடர் குற்றவாளிகளைக் கண்காணிப்பது போன்ற குற்றத்தடுப்புப் பணிகள் இன்னும் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் காவல்துறையை வலியுறுத்துகிறது.
- R. தங்கவேலு,
துணைத் தலைவர்
மக்கள் நீதி மய்யம்.
in அறிக்கைகள்