மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில், தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்.

23 ஆகஸ்ட், 2024

                `

வணக்கம்

இன்று (23-08-2024) காலை 11 மணியளவில் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில், தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A.,B.L. அவர்கள், துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (ஓய்வு) அவர்கள், திரு. R.தங்கவேலு அவர்கள் மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கிடையே சிறப்புரை ஆற்றினார்.



தீர்மானங்கள்:

23-08-2024 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களாவன: 


தீர்மானம் -1 
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக விரைந்து செயல்பட்ட கேரள மாநில அரசு, மத்திய பேரிடர் மீட்புக்குழுவினர், தன்னார்வலர்கள், மருத்துவ மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆற்றிய சேவைகள் பாராட்டுக்குரியவை. குறிப்பாக தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த செவிலியர் சபீனாவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு மனதாரப் பாராட்டுகிறது.
வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவை மனதில் கொண்டு தமிழ்நாட்டில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை நிபுணர் குழு மற்றும் நவீனத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் உருவாக்கப்படுவதைத் தவிர்க்கும் விதமாக விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுத்தி பேரிடர் சேதங்களைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற முன்மொழியப்படுகிறது. 

தீர்மானம் - 2
கட்சி நிர்வாகப் பணிகளையும் செயல்பாடுகளையும் மேலும் செம்மைப்படுத்தும் வகையில் கட்சியின் விதிமுறைகளில் (BYE-LAWS)வில் தேவையாகக் கருதும் மாற்றங்களை மேற்கொள்ள கட்சியின் நிர்வாகக்குழுவிற்கு முழுப்பொறுப்பு வழங்கப்படுவது என தீர்மானிக்கப்படுகிறது. 

தீர்மானம் -3

2026 சட்டமன்றத் தேர்தலை சிறப்புற எதிர்கொள்ளும் பொருட்டு மாநிலச் செயலாளர்களாகப் பணியாற்றும் அனைவரும் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினர்களாகச் செயலாற்றுவார்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழுவில் தலைவர், தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் நிர்வாகிகளாக இருப்பார்கள் என்றும் தீர்மானிக்கப்படுகிறது. 

தீர்மானம் - 4 

2025 ம் வருடம் பிப்ரவரி 9-ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நிர்வாகக் குழுவுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது. இதன் தொடர்பாக நிர்வாகக் குழு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் செயற்குழு அங்கீகரிக்கிறது. 

தீர்மானம் -5

பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்குப் பெரிதும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள `நம்மவர் நூலகம்’ பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் மதுரை மலைச்சாமிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து, மேலும் பல ஊர்களில் நம்மவர் நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்காக கட்சித் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கும், கமல் பண்பாட்டு மையத்துக்கும், நூலகம் அமைக்க உதவிக்கொண்டிருக்கும் வடஅமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கத் தோழர்களுக்கும், அதன் ஒருங்கிணைப்பாளராக சிறப்பாகச் செயல்பட்டு வரும் சி.ஆர். மதுசூதன் அவர்களுக்கும் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. 

தீர்மானம் -6

மகத்தான மக்கள் தலைவராகவும், தமிழுணர்வு மிக்கவராகவும் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நாணயம் வெளியிட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிக்கும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த மத்திய அரசுக்கும் செயற்குழு பாராட்டு தெரிவிக்கிறது. 

தீர்மானம் -7 

எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அமல்படுத்த உடனடியாக சட்ட உத்தரவாதங்களை அளிக்குமாறு மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. 

தீர்மானம் - 8 

மனசாட்சியுடன் தொடர்ந்து வரி செலுத்தும் மாதச் சம்பளம் வாங்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய பட்ஜெட்டில் உரிய சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமென மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. 

தீர்மானம் - 9

தமிழகத்தில் விரைவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவிருக்கிறது. கடந்த கால மழை வெள்ளங்களால் தமிழகம் கற்றுக்கொண்ட பாடங்களை மனதில் வைத்துக்கொண்டு பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அனைத்து விதமான வானிலை எச்சரிக்கைகளையும் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 10

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சிறப்புற எதிர்கொண்டு மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு ஏதுவாகத் தேர்தல் குழுவை அமைக்கவும், மேலும் இது தொடர்பாக பிற முடிவுகளை எடுக்கவும் நிர்வாகக் குழுவிற்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அவ்வாறு நிர்வாகக் குழு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் செயற்குழு நடைமுறைப்படுத்தவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. 

தீர்மானம் - 11

திரு. இப்ராஹிம் அக்பர் அவர்களை கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக, இந்தச் செயற்குழு ஏகமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றுகிறது. 

தீர்மானம் - 12

மக்களை ஒரு பண்பட்ட நாகரிகச் சமுதாயமாக நடத்துவதற்கான கடமை எல்லா அரசுகளுக்கும் உண்டு. இதற்கு ஊறு விளைவிக்கிற குற்றங்களான, மகளிர்க்கு எதிரான வன்கொடுமைகள் கற்பழிப்பு, போதைப்பொருள் புழக்கம் போன்றவற்றை ஒடுக்க மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். மேற்படி குற்றங்களில் ஈடுபடுபவர் மீது துரிதமான நடவடிக்கைகளை எடுக்கவும், அதிகபட்ச தண்டனைகளை விரைந்து வழங்கவும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய மாநில அரசுகளை மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு வலியுறுத்துகிறது.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post