நாங்குனேரியில் சாதிய வன்மம் ஊட்டப்பட்ட மாணவர்கள் செய்த கொடுஞ்செயலுக்கு ஆளான தம்பி சின்னதுரைக்கும், அவரது சகோதரிக்கும் ஆறுதல் சொல்ல உலகின் எந்த மொழியிலும் வார்த்தை இல்லை. அவர் சிந்திய ரத்தம், தமிழ்நாட்டில் பிஞ்சு மனங்களில் கூட சாதி வெறி வேரூன்றியுள்ளதை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது. தம்பி சின்னதுரையும், அவரது சகோதரியும் விரைவில் மீண்டெழுந்து வரவேண்டும். பாடசாலைக்கு தலை நிமிர்ந்த படி சென்று சிறப்பாகக் கல்வி கற்று மாபெரும் வெற்றியாளர்களாக திகழவேண்டும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களும் கல்வி கற்கும்போது இதுபோன்ற கொடுமைகளை எதிர்கொண்டு பின்னர் மிகப்பெரிய உலகம் போற்றும் கல்வியாளராக ஆனார்.
அவரைப்போலவே இங்கே கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இக் குழந்தைகள் உலகம் போற்றும் அளவிற்கு கல்வியாளராக வேண்டும்.
சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக அம்பேத்கரும், காந்தியும், பெரியாரும், நாராயண
குருவும் இன்ன பிற தலைவர்களும் முன்னெடுத்த போரை நாம் அதே உக்கிரத்துடன் மீண்டும் தொடங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாங்குனேரி விவகாரத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்த உடனடி நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கின்றன.
பள்ளிகளில் பற்பல பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பிறப்பினால் மனிதர்கள் அனைவரும் சமம்; மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது எனும் சமூகப்பாடம்தான் முதன்மையாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது.
பள்ளி மாணவர்கள் சாதி அடையாளக் கயிறு கட்டுவதும், தங்களது வாகனங்களில் சாதிப்பெயரை எழுதி வைத்துக்கொள்வதும், ஒரே சாதி மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து சக மாணவர்களையே தாக்குவதும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும் பல கல்விக்கூடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது கசப்பான உண்மை.
இந்நிலை மாற அரசும், அதிகாரிகளும், கல்வி நிறுவனங்களும், பெற்றோரும், மாணவர்களும் ஒத்திசைந்து செயல்பட வேண்டியது அவசியம். சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் முற்போக்குச் சிந்தனையாளர்கள், அறிஞர்கள், கலைஞர்களை அழைத்து வந்து மாணவர்களிடம் உரையாடச் செய்யவேண்டும். சமூகநீதி தனிப்பாடப் பிரிவாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். மாணவர்களிடையே சமத்துவத்தை வளர்க்கக் கூடிய நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். சாதிய பாகுபாடுகள் அதிகம் இருக்கும் பள்ளிகளில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு சமூக ஆர்வலரை வழிகாட்டியாக (mentor) ஒருவரை பொறுப்பெடுக்கச் செய்யலாம். பொதுவெளியில், சமூக ஊடகங்களில் சாதிய வேறுபாட்டையும், வன்மத்தையும் விதைப்போர் மீது கடுமையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட வேண்டும்.
ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்டவர்கள் கல்விதான் தங்களைக் கரையேற்றும் கலங்கரைவிளக்கு என்பதை உணர்ந்து முன்னேறி வருகையில் அவர்களை ஆதரித்து அரவணைக்கவேண்டியது ஒரு ஆரோக்கிய சமூகத்தின் கடமை. இது போன்ற அநீதி இனி நடவாமல் தடுப்போம்.
- A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு),
துணைத் தலைவர், மக்கள் நீதி மய்யம்..
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1691673606764237293?t=mj-80Lm0m0-AB8eb9xHbpQ&s=19
Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02dNvWn8nQpCapMwGZChTWuGgnRnA9wqTyH9WR7RXL3teF8Bkft9mAiXWBz29GisqYl&id=100064900236042&mibextid=Nif5oz
Instagram: https://www.instagram.com/p/Cv_h8mpplct/?igshid=MmU2YjMzNjRlOQ==