நாம் மறந்து போன, நம்மை விட்டு மறைந்து போன நமது பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை மீட்பதில் ஒரு போராளியாகச் செயல்பட்டவர் நெல் ஜெயராமன். ஓர் தனிமனித இயக்கமாக அவர் மறுகண்டுபிடிப்பு செய்து தந்தவை சுமார் 174 நெல் ரகங்கள்.
தனக்குப் பின்னரும் இந்தப் பேரியக்கம் தொடர்வதற்கான விதைகளை அவர் ஊன்றிச் சென்றிருக்கிறார். அதன் சாட்சியாக ‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அவரது வழித்தோன்றல்களும் மாணவர்களும் ஜெயராமன் ஏற்றிய நெருப்பை அணையாமல் பாதுகாத்து வருகிறார்கள்.
பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு, பாதுகாத்து, மறு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், வேளாண்மைத் துறைக்கும், வேளாண்மையைப் பயில்கிறவர்களுக்கும், பயிற்றுவிப்பவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் விலையில்லாமல் அளித்து வருகிறது இந்த இயக்கம். இந்த அமைப்பின் நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களை 12.06.2023 அன்று நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய திரு. கமல்ஹாசன் ‘திருகியெழுதப்பட்ட புனைவரலாற்றிலிருந்து, நமது உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். தமிழர்களின் மரபிலும் பண்பாட்டிலும் வரலாற்றிலும் நமது வேளாண்மைக்கும், உணவுப் பழக்கத்திற்கும் மறுக்கமுடியாத இடம் உண்டு. வரலாற்றை மீட்டெடுப்பது போலவே நமது பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர்நிலைகளையும் மீட்டெடுத்தே ஆகவேண்டும். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இதுவும் எனது கடமை என்றே நினைக்கிறேன்.
கைவிடப்பட்ட ஊர்க்கிணறுகளை மீட்டெடுக்கும் ‘ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்’ பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். உடனடியாக அவர்களை வரவழைத்துச் சந்தித்தேன். எனது ஆதரவையும், சிறு பங்களிப்பையும் அவர்களுக்கு நல்கினேன். சமூகமாற்றத்திற்கான முன்னெடுப்புகளை எவர் செய்தாலும், என்னால் ஆன பங்களிப்பும் அதில் இருக்கவேண்டுமென்பதே என் விருப்பம்.
பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கவும், பரவலாக்கம் செய்வதற்கும் நீங்கள் செய்துவரும் முயற்சிகள் அனைத்தும் முக்கியமானவை. என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வேன்” என தெரிவித்தார்.
இயற்கை விவசாயம், தற்சார்புப் பொருளாதாரம், மரபு வேளாண்மை, சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நாட்டினங்கள் பரமாரிப்பு, நீர்நிலைகள் மீட்டெடுப்பு, கிராம மேம்பாடு உள்ளிட்டவை நான் எப்போதும் அக்கறை கொள்பவை. இவற்றில் எனது பங்களிப்பு என்றென்றும் தொடரும். வருகிற ஜூன் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் இவர்கள் நடத்தும் ‘தேசிய நெல் திருவிழா - 2023’ நிகழ்வில் தமிழ் நிலத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கலந்துகொள்ள வேண்டும். பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் இந்த இளைஞர்களின் முயற்சிக்கு சமூகம் துணை நிற்கவேண்டும் என்றும் திரு.கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது திரைப்பட இயக்குனர்கள் ஹெச்.வினோத் மற்றும் இரா.சரவணன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், உயர்மட்டக்குழுத் தலைவர் பந்தநல்லூர் அசோகன், உயர்மட்டக்குழு உறுப்பினர் நன்னிலம் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இவர்களுடன் இருபதிற்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளும் திரு. கமல்ஹாசனைச் சந்தித்து உரையாடினர்.
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1668606641179344897?s=20
Facebook: https://fb.watch/l894TBXQMM/?mibextid=Nif5oz
Instagram: https://www.instagram.com/reel/CtboRoXp0rz/?igshid=MzRlODBiNWFlZA==